The Poem - பாலவிஹாரின் கோடைகால முகாம்!

கார்மேகக் கண்ணா!
உமது நாமத்தால் அன்பும் பண்பும் அறிந்து
அறவழியில் இன்புற,
எமக்கு கிட்டிய அரியதோர் உபாயம்,
பாலவிஹாரின் கோடைகால முகாம்.

அன்னையர் அரவணைப்பில் இருந்து,
ஆறிரவு அகல அழுத இதயம்;
பசுந்தளிர் சோலையானா சின்மய சாந்தீபனி ஆஸ்ரமத்தின்
அன்பில் ஆசுவாசம் அடைந்தது.

அனுதினமும் சுவாமி அபராஜிதானந்தா அவர்களின் வழிநடத்தலில்,
நமச்சிவாயனின் திருவடியில் 'நாராயண சூக்தம்' பயின்றோம்.

வானுயர்ந்த சின்மய கணபதியின் பாதம் தொட்டு
மித்திரர்களின் தோளோடு தோள் சேர்த்து
கிருஷ்ணரின் வேடம் தரித்து
வெண்ணை கொண்ட மட்பானையை உடைத்தால்,
தண்ணீர் தான் வழிந்தோடியது; வெண்ணையல்லவே!
இது விதியின் விளையாட்டா ? - அல்லது
யுவ கேந்த்ரா சகோதரர்களின்  சதித்திட்டமா ?
விடையளியுங்கள் ஆச்சாரியர் அவர்களே.

விண்மீன்களை விட்டில்பூச்சிகளாய் எண்ணிய எமக்கு
ஸ்ரீ பிரஷாந்த் அவர்களின் வானோக்கு மூலம்
சப்தரிஷி மண்டலம், பெகாசஸ் மற்றும் 12 ராசிகளின்,
நட்சத்திர கூட்டங்களைத் துல்லியமாய்க் கண்டோம்.

மா, பலா, சப்போர்ட்டா மற்றும் நெல்லி மரங்களின்
காய் கனிகளை அதன் பிறப்பிடத்தில் கண்டது - எமக்கு
கண்கொள்ளா காட்சியாயிற்று.

ஆலமரத்து நிழலின் ஆனந்தம்;
மாமரத்தில் ஏறுவதின் ஆரவாரம்;
பசுமாட்டின் பராமரிப்பு;
பத்து நாள் கன்றின் ஸ்பரிசம்;
குரங்கின் மடியில் குட்டியின் கதகதப்பு;
ஓட்டிலிருந்து எட்டிப்பார்க்கும் நத்தை;
எட்டிகுத்திக்கும் வெட்டுக்கிளி;
வாலை ஆட்டும் நாய்க்குட்டி;
இவையனைத்தும் காப்பியத்திலும்,
கிராமிய படங்களிலும் கண்ட
இயற்கை காட்சிகள்
இன்று கண்ணெதிரே நினைவாயிற்று!

சட்டென்று கார்மேகம் சூழ்ந்து
மண்ணில் விழுந்த முதல் துளியால்
எழுந்த மண்வாசனையானது
மயிலிறகு போல் மனதை வருடியது.

வியக்க வைக்கும் விஞ்ஞானம்,
விண்ணைத்தொட வித்திட்டத்து,
நமது முன்னோர் படைத்த வேதாந்தங்களும், உபநிஷங்களும் மற்றும் சாஸ்த்திரங்களும்    என்றுணர்த்தோம்.

எம்மவரை, கோவிந்தா, கோபாலா, அச்சுதா,
முகுந்தா, கேசவா, மாதவா, முராரி என்று
கிருஷ்ணரின் நாமம் கொண்டு,
ஏழு அணிகளாக பிரித்து,
இனிவரும் முகாம் நாட்களில்
ஒன்றிணைந்து செயலாற்ற பணித்தனர்.
ஆன்மீகம் சார்ந்த புதையல் வேட்டை, விளையாட்டு,
குழுமுறையில் கலந்துரையாடல், நாடகம் என்று
ஒவ்வொரு நிகழ்விலும் ஒருமித்து பங்கேற்றோம் .
'நான்' எனும் வேற்றுமையை அழித்து,
'நாம்' எனும் ஒற்றுமையை தோற்றுவித்த,
முகாம் குழுவிற்கு மனமார்ந்த நன்றி!

முகாமின் ஆதி  முதல் அந்தம் வரை,
மனதை மதியால் வெல்லும் சூத்திரத்தை போதித்து;
உடல், உள்ளம், அறிவாற்றல் ஒருங்கிணைந்து செயலாற்றினால்,   
கோபம், பேராசை, திரிபுணர்ச்சி, அகந்தை, பொறாமை போன்ற
எதிர்மறை எண்ணங்களை ஒளித்து;
வாழ்க்கையை செழிமையாக்கலாம் என்று எடுத்துரைத்தனர்.

இன்று எம்முள் விதைக்கப்பட்ட நல் விதையானது,
விரைவில் பெரும்விருட்ஷமாக விஸ்வரூபம் தரித்து,
பூவுலகைக் காக்கும் என்று வாக்களிக்கின்றோம்.

கற்ற ஸ்திரோத்திரங்களும், பஜனைகளும்,  வேதங்களும் மனதில் ரீங்காரமிட
பேருந்தில் ஏறி பயணிக்க எத்தனித்த எம்மவரை
வாசல் வரை வந்து வழியனுப்பி
பண்பாட்டை பறைசாற்றிய ஆச்சாரியர் அவர்களுக்கு வந்தனம்!

யாம் அனைவரும்
உத்தம புத்திரர்களாக திகழ
நித்தமும் பயிற்ச்சி அளித்த
"பாலவிஹாரின் கோடைகால முகாம்"   நாட்களை
சிந்தையில் வைத்து சிறப்புறுவோம்!

- Tamil Poem By
Bhuvana

No comments:

Post a Comment